சென்னை: மதுரை அடுத்த கீழடியில் ரூ.24.30 கோடியில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஈரோட்டில் நொய்யல், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க கீழடியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிக் கூடங்களுடன் ரூ.24.30 கோடி செலவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் திறந்தார்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் ரூ.2.75 கோடியில் மேற்கொள்ளப் பட்ட உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டிட முகப்பு விளக்குகளின் செயல்பாடுகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையத்தில் ரூ.33.19 கோடியில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் ரூ.34.55 கோடியில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர, சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கில், 2023–24-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.41 கோடியில் அருங்காட்சியகத் துறையால் அமைக்கப்படவுள்ள சோழர் அருங்காட்சியகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, சுற்றுலாத் துறை செயலர் மணிவாசன், நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், அருங்காட்சியகத் துறை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் அழைப்பு: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு குறித்து சமூகவலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவு: தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை கீழடிக்கு பெற்றோர் அழைத்து வாருங்கள். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.
ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு- நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.