விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: “தவெகவுக்கு ஆதரவாக நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்ளிட்ட சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவோடு களத்தில் நிற்பதை, அவ்வளவு எளிதாக எப்படி அவர்களால் கடந்து செல்ல முடியும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “ஜூன் 14-ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, யாருக்கும் அறுதி பெரும்பான்மை இம்முறை கிடைக்கவில்லை. ஆனால், தவெக தனிப்பெரும் கட்சி என்ற இடத்தை பிடித்தது. ஆட்சியமைக்க அவர்களுக்கு 11 இடங்கள் தேவைப்பட்டன. குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துவிடக் கூடாது, மறு தேர்தல் வந்து விடக்கூடாது என்பதற்காக தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல் மற்றும் விசிக கட்சிகள் ஆதரவளித்தன. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நாம் இந்த அரசியல் நெருக்கடியை உணர்ந்து ஆதரவை நல்கியுள்ளோம்.
இது தொடர்பாக பலரும் விமர்சனங்களை செய்து வருகின்றனர். இது தவிர்க்க முடியாததுதான், இதனை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதில் வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ எதுவும் இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் நாம் இடம்பெற்றிருந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி வெற்றிபெறக்கூடாது என்பதை மட்டுமே இலக்காக வைத்து பிரச்சாரம் மேற்கொண்டோம். நாம் எதிர்பார்த்ததை போல அதிமுக-பாஜக கூட்டணி வீழ்த்தப்பட்டது. பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பாஜக இங்கே பெரியளவில் காலூன்ற விரும்பினார்கள், அவர்கள் முன்வைத்த சதிமுயற்சி அனைத்தும் தோல்வியடைந்தன. அந்த வகையில் நாம் எடுத்த முயற்சி வெற்றிதான்.
தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணி வெற்றி பெற முடியாமல் போனது. இதனை தேர்தலுக்கு முன்பே கணித்தோம். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் பெரும்பான்மையான வாக்குகளை தவெக பிரிக்கும், இதனால் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆனால் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்ற யூகம் நமக்கு இருந்தது. இதனால் தான் நானும் சட்டப்பேரவைக்கு வரவேண்டும், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தேர்தலில் போட்டியிடுவதாக நான் அறிவித்தேன்.
தேர்தலுக்கு பின்பு தவெக பெறும் வாக்குகளை வைத்து கூட்டணிகளும், அணி சேர்க்கைகளும் மாறும் என நான் சொல்லியிருந்தேன். ஆனால், தவெக தனிப்பெரும் கட்சியாக மாறிவிட்டது. ஆட்சியமைக்க கூடுதல் இடங்கள் தேவை எனும் நெருக்கடி ஏற்பட்ட போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேகவேகமாக அவர்களுக்கு ஆதரவளித்தது. எனவே இடதுசாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் முடிவெடுப்பதாக வெளிப்படையாக அறிவித்தேன்.
நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர். அதனையொட்டி விசிக உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. உடனே ஏன் நீங்கள் அறிவிக்கவில்லை என நம்மை எப்போதும் விமர்சிப்பவர்கள் விமர்சித்தார்கள். அமைச்சரவையில் சேரவேண்டும் என உயர்நிலைக்குழுவில் முடிவெடுத்தனர். பொதுச்செயலாளர்களுடன் ஆலோசித்து வெளியில் இருந்து ஆதரிக்க முடிவெடுத்து கடிதம் வழங்கினோம்.
ஆனால், முதல்வராக, துணை முதல்வராக திருமாவளவன் பேரம் பேசுகிறார் என அவதூறு பரப்பப்பட்டது. முன்பு ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோதும் நம் மீது பெரும் அவதூறு பரப்பட்டது. இப்போது யார் யார் நம் மீது காழ்ப்பு கொண்டுள்ளனர் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யோடு நாம் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்ததால், அவர் மீது 6 மாத ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். பின்னர் அவர் விசிகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தார். அவரை வாழ்த்தி அனுப்பினோம். கரூர் சம்பவத்தின்போது ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன்பின்னர் அவரோடு எப்போதும் பேசியதில்லை.
இப்போது ஆ.ராசா நாம் எடுத்த முடிவை விமர்சனம் செய்திருந்தார். நான் அதனை பொருட்படுத்தவேண்டாம், எதிர்வினை ஆற்ற வேண்டாம் என அறிவுறுத்தினேன். அவர் காங்கிரஸை விமர்சிக்கவில்லை. தவெகவின் அழைப்பின் பேரில் அமைச்சரவையில் இடம்பெற்றோம். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும்போது, ஸ்டாலினை சந்தித்து, ‘இடதுசாரிகளின் முடிவின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தேன்’. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஆதரவு நல்கலாம் என இசைவு தெரிவித்தார். ஆனால், அமைச்சரவையில் இடம்பெறும் முடிவை ஸ்டாலினிடம் சொல்ல முடியவில்லை. ஆனால், திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் சொல்லிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டேன்.
திமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் விசிக பயணித்தது. அந்தக் கூட்டணியை பாதுகாக்க எங்களால் ஆன பங்களிப்பை எவ்வளவு அளித்துள்ளோம் என்பதை ஸ்டாலின் நன்கு அறிவார். உதயநிதியும் நன்கு அறிவார். அதையும் தாண்டி நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்ளிட்ட சிலர் விமர்சிக்கிறார்கள் என்பது சற்று வலியாக உள்ளது. என்றாலும் அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவோடு களத்தில் நிற்பதை, அவ்வளவு எளிதாக எப்படி அவர்களால் கடந்து செல்ல முடியும். கடும் சொற்களால் விமர்சிக்க கூடாது, அந்தப் பதிவை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது. விசிகவினர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும். நம்மை பிடிக்காதவர்கள் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். திமுக அணியிலேயே தொடர்ந்தாலும், திமுக கொத்தடிமை என்பார்கள். வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சனம் செய்வார்கள். காங்கிரஸை விட, விசிக செய்த துரோகம் பெரியது என விமர்சிக்கிறார்கள். ஆதவ் அர்ஜூனாவோடு சேர்ந்து சதி செய்தோம் எனச் சொல்கிறார்கள்.
ஆனால், ஸ்டாலினின் மனசாட்சிக்கு தெரியும், விசிகவும், திருமாவளவனும் எவ்வளவு நேர்மையான உறவை கொண்டிருந்தோம் என்பது. திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என்பதில் எவ்வளவு உறுதுணையாக இருந்தோம் என்பது அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும். எனவே இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்க வேண்டாம். தேர்தலுக்குப் பின் இந்தக் கூட்டணியை கட்டிக்காக்கும் பொறுப்பு திமுகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.
இஸ்லாமியர், கிறிஸ்தவ வாக்குகள் 100 சதவீதம் திமுக கூட்டணிக்கு கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு வாக்குகளும் சிதறியது உண்மை. ஆனால், விசிகவுக்கான தலித் வாக்குகள் மட்டுமே சிதறியதால் தான் திமுக தோல்வியடைந்ததாக சொல்கிறார்கள். பாஜக 9 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளது. திமுக, அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதெல்லாம் தலித் வாக்குகளா?. ஆனால் விசிகவுக்கு தான் இழப்பு ஏற்பட்டுள்ளது, தலித் வாக்கு வங்கி மட்டும் சரிந்துள்ளதாக அவதூறு பரப்புகிறார்கள். அனைத்து தரப்பு வாக்குகளும் சிதறியுள்ளதே உண்மை. இன்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, அமைச்சரவை அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் இடத்தை விசிக எட்டியுள்ளது. இதனை பொறுக்க முடியாமல் அவதூறு பரப்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.