கும்பகோணம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய கும்பகோணத்தைச் சேர்ந்த 57 சுற்றுலா பயணிகளில் 20 பேர் தப்பிய நிலையில், இன்று ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மீதமுள்ளவர்களை 3 நாடுகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலை கல் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்கள் நொடிப் பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர். கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை கும்பகோணத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் அழைத்துச் சென்றிருந்தது.
இவர்கள் நேற்று காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஒரு வாகனத்தில் சென்ற 20 பேர் தப்பி பத்திரமாக உள்ளனர். மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினர்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளத்தில் சிக்கிய 37 பேரில் கடலூரைச் சேர்ந்த திருமாவளவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் 57 பேரில் மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். இவர்களில் 11 பேர் திருசூலி பகுதிகளிலும் மீதமுள்ள 10 பேர் குண்ணூஸ் பகுதியிலும் நேபாள ராணுவ தள முகாமில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் அங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரம் உள்ள காத்மாண்டுக்கு அழைத்து வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேற்றிரவு மழை பெய்ததால், மீட்புப் பணி தொய்வடைந்தது. இதையடுத்து இன்று காலை 2-வது நாளாக இந்தியா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களில் அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையில் சுற்றுலா சென்றோரின் உறவினர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா நிறுவனம் உரிமையாளர் செய்யது சாதிக்கிடம் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து கண்ணீர் விட்டபடி கேட்டனர். இந்தச் சம்பவத்தால் கும்பகோணம் முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க அந்த நிறுவனம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.