அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக.வில் இணைந்தார்.
தமிழகத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் தனி அணியாகச் செயல்படுகின்றனர். இந்த அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். பிறகு அவர்கள் தவெகவில் இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 3 பேரும் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சி.வி.சண்முகம் அணியில் உள்ள அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார். ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அவர் மறுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை மட்டுமே ஏற்க முடியும். தட்டச்சுசெய்து அதில் கையெழுத்திட்டகடிதத்தை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கைப்பட ராஜினாமாகடிதத்தை எழுதி, பேரவைத் தலைவரிடம் இசக்கி சுப்பையா வழங்கினார்.
அதை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டார். பிறகு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, ‘‘எதிர்க்கட்சி எம்எல்ஏவாக பெரிய அளவில் நலத்திட்டங்களைக் கொண்டு வரமுடியவில்லை. இப்போது என் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்” என்றார்.
4 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு: அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இருந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை ) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா வும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 4 தொகுதிகளும் காலியாகிவிட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன.