சென்னையில் நேற்று நடைபெற்ற லோக்-அதாலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி வழங்கினார். அருகில் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும் நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன்.
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1 லட்சத்து 3,884 நிலுவை வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 857.77 கோடி இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக்-அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தல்படி வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி.பாலாஜி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஏ.ராமமூர்த்தி, எஸ்.கே.கிருஷ்ணன், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி. சொக்கலிங்கம், ஆர்.தாரணி ஆகியோர் தலைமையிலும் நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா அளவில் மொத்தம் 516 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 1 லட்சத்து 3,884 நிலுவை வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் மொத்தம் ரூ. 857.77 கோடிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மேற்பார்வையிட்டார். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திராவும், திண்டுக்கல்லில் நீதிபதி எம். தண்டபாணியும், புதுக்கோட்டையில் நீதிபதி என். செந்தில்குமாரும் பார்வையிட்டு காசோலைகளை வழங்கினர்.
இதேபோல சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்-அதாலத்தில் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் நடைபெற்றஇந்த லோக்-அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தந்த மாவட்டநீதிபதிகள் செய்திருந்தனர்.