தமிழகம்

ஒரு கிலோ ரூ.8500 - நிலக்கோட்டையில் மல்லிகைப் பூ விலை உச்சம்!

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இன்று அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.8500-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் அதிக பரப்பில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய நகரங்களில் பூ மார்க்கெட் இயங்கிவருகிறது. இதில் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற நகரங்கள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கள் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பூ மார்க்கெட்களுக்கு ஆண்டுதோறும் பூக்கள் வரத்து உள்ள நிலையில், மல்லிகைப்பூ மட்டும் முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் உச்சபட்ச விலைக்கு சென்று வரும். இந்நிலையில், தற்போது மல்லிகைப் பூ விளைச்சலுக்கு ஏற்ப தட்பவெப்பநிலை இல்லாததால் மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ விளைச்சலுக்கு வறண்ட வானிலை, அளவான தண்ணீர் இருந்தால் போதும். ஆனால் தற்போது குளிர்ந்த வானிலை காணப்படுவதால் மல்லிகைப் பூ விளைச்சல் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு மிகக் குறைந்த அளவு மல்லிகைப் பூக்களே விற்பனைக்கு வந்தது.

காலை முதலே வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு மல்லிகை பூக்களை வாங்கினர். இதனால் அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லிகை ரூ.8500-க்கு விற்பனையானது. இதன் பின் விலை குறைந்தது.

இதுகுறித்து நிலக்கோட்டை பூ மார்க்கெட் வியாபாரி மகேந்திரன் கூறுகையில், “தைப் பொங்கல் நாட்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மல்லிகைப் பூ அதிகம் வாங்குவர். இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்ப மல்லிகைப் பூவை அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளனர்.

ஒரு நாளைக்கு இரண்டு டன் வரை மல்லிகைப் பூ விற்பனை செய்யும் எங்கள் கடையில் 20 கிலோ மல்லிகை பூ மட்டுமே விற்பனைக்கு வந்தது. அந்த அளவிற்கு வரத்து குறைவால் விலை உச்சத்திற்கு சென்றது” என்றார்.

SCROLL FOR NEXT