

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரும் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜன. 9-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என படத்தயாரிப்பு குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்துக்கு இன்னும் தணிக்கை சான்று வழங்கவில்லை எனக்கூறி படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் மறு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளதாக மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஜனநாயகன் படத்தயாரிப்பு குழு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, இவ் வழக்கின் தீர்ப்பை ஜன.9-க்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளிக்கவுள்ளார்.