பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

விழுப்புரத்தில் பேனரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் காயம்

என்.முருகவேல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பேனரை அகற்றும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம், கே.கே. ரோடு, கணபதி நகர் ஜங்ஷன் பகுதியில் இன்று (20.09.2026) காலை சுமார் 8 மணியளவில், கணபதி நகர் பகுதி இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றி, அதே பகுதியைச் சேர்ந்த கரண் என்ற கதிர்வேல் என்பவரின் மகன் மித்ரனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேனர் வைப்பதற்காக சிலர் முயன்றுள்ளனர்.

அப்போது பழைய பேனரை அகற்றிக் கொண்டிருந்தபோது, பேனர் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் (HT Line) பட்டதில், பேனரை பிடித்துக் கொண்டிருந்த மதன்குமார் (28) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கதிர்வேல் (30), வஞ்சிநாதன் (21), பூவரசன் (24) மற்றும் கோகுல் (19) ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த மதன்குமார், கே.கே. ரோடு, ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர். பேனர் ஒட்டுதல் மற்றும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த கதிர்வேல் மற்றும் பூவரசன் ஆகியோர் விழுப்புரம் இஎஸ் மருத்துவமனையிலும், வஞ்சிநாதன் விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வஞ்சிநாதன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோகுல் இரு உள்ளங்கைகளிலும் காயமடைந்து விழுப்புரம் இஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT