கோப்புப் படம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் பன்மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல் விமானங்களில் வழக்கத்துக்கு மாறாகக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
இதற்காகப் பயணிகள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பேருந்துகளில் இட நெருக்கடி மற்றும் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பயணிகளிடம் பல மடங்கு கட்டணங்கள் வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது.
தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு சார்பில் 5,400 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை - திருச்சி ரூ.4,000, சென்னை - மதுரை ரூ.4,000, சென்னை - கோவை ரூ.6,000 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சென்னைக்கு திரும்ப திருச்சி -சென்னை ரூ.4,500, சென்னை - மதுரை ரூ.4,900, கோவை - சென்னை ரூ.4,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானக் கட்டணம்: பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஏராளமான பயணிகள் விமானங்களில் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விமானக் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
குறிப்பாக சென்னை - தூத்துக்குடி சாதாரண நாட்களில் ரூ.6,991 ஆக இருந்த கட்டணம் ரூ.17,153 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை - மதுரை ரூ.5,393 ஆக இருந்த கட்டணம் ரூ.19,761, சென்னை - திருச்சி ரூ.4,646 ஆக இருந்த கட்டணம் ரூ.14,673, சென்னை - கோவை ரூ.4,966 ஆக இருந்த கட்டணம் ரூ.16,496 என உயர்த்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்: சொந்த ஊர்களுக்குச் செல்லநேற்று மாலை முதல் ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்கள் வரிசைக்கட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மணி நேரம் ஊர்ந்து சென்றன. இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் களிலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தைச் சீர்செய்ய காவல் துறையினருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.