மதுரை: ஆம்னி பேருந்து கட்டண நிர்ணய குழுவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், உயர் நீதிமன்றம் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழு அமைத்தது. அந்தக்குழு ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் சரியான கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்றம் குழு அமைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் 2016-ல் தடை விதித்தது. இதனால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கடந்த 8 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, தடையை நீக்க இதுவரை மனுத் தாக்கல் செய்யாதது ஏன், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசுக்கு மனம் இல்லையா, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.