சென்னை: வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போரால், இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பல இடங்களில் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளன. வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்கும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, சிலிண்டரை அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விசயத்தில் மக்கள் எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என்ற எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் பீதி அடையத் தேவையில்லை. எல்பிஜி விநியோகம் மற்றும் சேவைகள் தொடர்ந்து வழக்கம் போல இயங்குகின்றன.
வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்கும், சீரான செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும், ஏற்கெனவே 16.67 சதவீதம் பணியாளர்களை எங்கள் நிறுவனம் அதிகரித்துள்ளது, மேலும் 28.5 சதவீதம் பணியாளர்களை அதிகரிக்கும் நடவடிக்கை நடைபெறுகிறது.
விரைவான முன்பதிவு செய்யவும், புகார்களுக்கு தீர்வு காணவும் வாடிக்கையாளர் அழைப்பு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன அறிவிப்பில், மக்கள் அவசரப்படவோ அல்லது பீதி அடையவோ தேவையில்லை.
பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவும், அனைத்து நுகர்வோருக்கும் எல்பிஜி நியாயமான மற்றும் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யவும் முன்பதிவு கால இடைவெளி 25 நாட்களாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.