சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களிக்க வந்தவர்கள், தங்களின் பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். | படம்: எல் .சீனிவாசன் |
சென்னை: சைதாப்பேட்டையில் சில வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலைமுதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர்.
அப்போது, காரணி தெருவைச் சேர்ந்த எஸ்.யசோதா, கணேஷ்குமார், மனோகரி, கலைச்செல்வன், சக்திவேல் ஆகியோர் வாக்களிக்க வந்தனர். ஆனால் அவர்களிடம் பூத் சிலிப் இல்லாததால், அவர்களின் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
எனவே அவர்களால் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். நிர்வாகத்தின் குளறுபடி இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அதிகாரிகளுடனும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“நாங்கள் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுத்தும் எங்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு, வாக்களிக்க வந்த எங்களை இப்படி திருப்பி அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்?” என்று அவர்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பினர்.
இதில் சக்திவேல் என்பவர் கூறுகையில், “மறைந்த எனது தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இப்பொழுதும் நீடிக்கிறது. ஆனால், எனது பெயர் இல்லை என்று கூறி வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தின் மிகப்பெரிய குளறுபடி” என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தின்போது, அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய இளைஞர் ஒருவர் வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற கால்சட்டையும் அணிந்திருந்ததால், அதை வைத்து அங்கு அரசியல் மோதலும் உருவானது.
அவர் அணிந்திருந்த ஆடையின் நிறத்தைக் குறிப்பிட்டு, அவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் என்றும், திட்டமிட்டே பிரச்சினையைத் தூண்டுவதாகவும் அங்கிருந்த மற்ற அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதனால் வாக்குச்சாவடி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இறுதியில் தலையிட்ட காவல் துறையினர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து அவர்களை வெளியேற்றினர்.