தமிழகம்

உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் ரூ.6,770 கோடிக்கு ஆட்சேபனைகள்: மாநில தணிக்கை அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ.6,770 கோடிக்கு 1.82 லட்சம் தணிக்கை ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளதாக உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் 2024-25-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தணிக்கை அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2024-25-ம் ஆண்டுக்கான தணிக்கையில், ரூ.6,770 கோடி மதிப்பிலான 1.82 லட்சம்நிதி ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதில் ரூ.1.28 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், ரூ.163 கோடி மதிப்பிலான 54 முக்கிய ஆட்சேபனைகள் தனியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள் ளன. அதில் ரூ.5.2 கோடி மீட்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4,229 நிறுவனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழலில், 4,217-ல் தணிக்கை முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திறந்தவெளி டெண்டர் இன்றி ரூ.20 கோடிக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

துப்புரவுப் பணியாளர்களை அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தியதால் ரூ.4.12 கோடியும், மூடப்பட்ட உர மையங்களுக்குப் பராமரிப்புச் செலவு காட்டி ரூ.2.12 கோடியும் வீணடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் வணிக நிறுவனங்களுக்கு குறைந்த குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை கட்டணம் வசூலித்ததால் ரூ.38.96 கோடிவருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சேலத்தில் மட்டும் ரூ.32.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளார்களா என சரிபார்க்காமலேயே ரூ.19.64 கோடி ஓய்வூதியம் தரப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட திட்ட ஒதுக்கீட்டு நிதியில் இருந்து ரூ.10.67 கோடி வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள் ளது. 7 பல்கலைக்கழகங்களில் ரூ.6.47 கோடி டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையிடம் இருந்து திரும்பப் பெறாமல் விட்டுள்ளனர்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழ கங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு வரவேண்டிய தணிக்கைக் கட்டணமாக ரூ.59.40 கோடி நிலுவையில் உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டு பற்றாக்குறை ரூ.863 கோடியாகவும், திரட்டப்பட்ட பற்றாக்குறை ரூ.3,567 கோடியாகவும் இருந்துள்ளது. சென்னை தவிர 24 மாநகராட்சிகளின் திரட்டப்பட்ட பற்றாக்குறை ரூ.1,526 கோடியாகவும், கடன் பொறுப்பு ரூ.3,055.24 கோடியாகவும் உள்ளது.

137 நகராட்சிகளில் 109 நகராட்சிகள் பற்றாக்குறையில் இருந்துள்ளன. எனவே, இத்தகைய தவறுகளுக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு நிதியை மீட்க பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT