ஓமந்தூரார் மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆட்குறைப்பு நடவடிக்​கைக்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழகம் முழு​வதும் செவிலியர்​கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழகத்​தில் உள்ள 7 அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்றி வந்த 210 செவிலியர்​கள் திடீரென சேலம், திருச்​சி, செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​களுக்கு மாற்​றுப் பணி அடிப்​படை​யில் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அரசின் இந்த நடவடிக்​கைக்கு செவிலியர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​காமல், ஒரு மருத்​து​வ​மனை​யில் இருக்​கும் பணி​யிடங்​களைக் குறைத்​து, மற்​றொரு மருத்​து​வ​மனைக்கு பணி​யிட மாறு​தல் வழங்​கு​வது முறையல்ல என்று செவிலியர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

இது மறை​முக​மான ஆட்​குறைப்பு நடவடிக்கை என்​றும், இதனால் மருத்​து​வச் சேவை​கள் பாதிக்​கப்​படும் என்​றும் அவர்​கள் கவலை தெரி​வித்​துள்​ளனர். அரசின் இந்த முடிவைக் கண்​டித்​து, தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்​டுச் சங்​கத்​தின் சார்​பில் மாநிலம் தழு​விய போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

நேற்று முன்​தினம் செவிலியர்​கள் அனை​வரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில் 2-வது நாளாக, நேற்று அரசின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில் கோரிக்கை அட்​டைகளை அணிந்து பணி​யில் ஈடு​பட்​டனர்.

அவர்​கள், ‘அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் செவிலியர்​கள் ஆட்​குறைப்பு தொடர்​பான அரசாணையை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும்’ என்ற வாசகங்​கள் அடங்​கிய அட்​டைகளை அணிந்து தங்​களது எதிர்ப்​பைப் பதிவு செய்​தனர்.

சென்​னை​யில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை, ஓமந்​தூ​ரார் அரசு பன்​னோக்கு மருத்​து​வ​மனை மற்​றும் ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை உள்​ளிட்ட அனைத்து முக்​கிய மருத்​து​வ​மனை​களி​லும் செவிலியர்​கள் இந்த நூதனப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தங்​களது கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்​டங்​கள் தொடரும் என செவிலியர் சங்​கத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT