தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருத்தணியில் முருகனை வழிபட்டு தொடங்கினார். மற்ற எல்லா கட்சிகளும் எங்களுக்கு எதிர்ப்பக்கம் சூலாயுதமாக உள்ளனர். நான் வேலாயுதமாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, நாதக தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் நேற்று தொடங்கினார். திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காலை வந்த சீமான், மலை அடிவாரத்தில் வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கரிக்கப்பட்ட வேலுடன் மலையேறி முருகனை வழிபட்டார். இதையடுத்து திருத்தணி நகர் பகுதியில் கமலா திரையரங்கம் அருகே வேட்பாளர் சந்திரனுடன் பரப்புரையை சீமான் தொடங்கினார்.
முன்னதாக கோயில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: முருகன் என் இனத்தின் இறைவன், முருகனை நம்பினோர் அஞ்சுவதற்கு இல்லை, அவரை நம்பி இந்த போர்க்களத்துக்கு செல்கிறோம். மற்றவர்களுக்கு இது தேர்தல் எங்களுக்கு இது போர், அதனால் முருகனிடம் சொல்லிவிட்டு செல்கிறோம். 2026 தேர்தல் நல்ல ஆட்சியை நோக்கி இருக்கும். உலகமே திரும்பி பார்க்கும் நல்ல ஆட்சியை கொடுப்போம். உலகத்தின் தலைசிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக இந்த நாட்டை மாற்றுவேன்.
அனைத்து கட்சிக்கும் ஒரே எதிர்க்கட்சி நாங்கள் தான், ஊழல் இல்லாத, இலவசம் தராத, வாக்கு காசு கொடுக்காத ஒரு கட்சியை சொல்லுங்கள். எல்லோரும் ஒரு பக்கம் உள்ளனர், நான் எதிர்பக்கத்தில் உள்ளேன். அவர்கள் சூலாயுதமாக உள்ளனர், நான் வேலாயுதமாக இருக்கிறேன். இலவசம் என்பது ஏமாற்று வேலை, எதையாவது கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர், அதிலிருந்து நான் மாற்ற நினைக்கிறேன். இவை இரண்டுக்கும் நடுவில் தான் போட்டி. இது நீண்டகாலமாக, 500 ஆண்டுகளாக நடக்கும் போர் என்பதால் முன்கூட்டியே பணிகளை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வேலோடு நீ வாடா முருகா!
சீமான் தனது பிரச்சாரத்தை ‘வேலோடு நீ வாடா முருகா’ என்ற பாடலைப் பாடித் தொடங்கினார். ‘திருத்தணி முருகா இங்கு அனைத்தையும் திருத்த நீ அருள்வாய் முருகா’ என்று வரியை பாடியபோது, கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
இதைதொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘ஆசிரியர்கள் முதல் தூய்மை பணியாளார்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் அனைத்து தொழில் செய்பவனும் அவன் தயாரிக்கும் பொருளுக்கு அவனே விலை நிர்ணயிக்கிறான், ஆனால் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு, வாங்குபவன் தான் விலையை நிர்ணயிக்கிறான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலையை மாற்றுவோம்’’ என்றார்.