மகனுக்கு வழிவிடுகிறாரா பொன்முடி? - சொல்லாமல் சொல்லும் சுவர் விளம்பரங்கள்

மகனுக்கு வழிவிடுகிறாரா பொன்முடி? - சொல்லாமல் சொல்லும் சுவர் விளம்பரங்கள்
Updated on
1 min read

தேர்தல் பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்தே, ‘இம்முறை திமுக-வில் சீனியர்கள் சிலருக்கு வாய்ப்பு இருக்காது’ என்ற செய்தியும் சேர்ந்தே றெக்கை கட்டியது. அந்த சீனியர்கள் வரிசையில், பொன்முடி, துரைமுருகனின் பெயர்கள் பலமாக அடிபட்டன.

இதை உறுதுப்படுத்தும் விதமாக இப்போது பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் அவருக்குப் பதிலாக அவரது மகன் கவுதம சிகாமணியின் பெயரும் உதயசூரியனும் கறுப்பு சிவப்பில் கண்ணைப் பறிக்கின்றன.

திருக்கோவிலூரை தேமுதிக-வும் விருப்பப் பட்டியலில் வைத்துள்ள நிலையில், தொகுதி யாருக்கு என்று இன்னும் முடிவாகாத நிலையிலேயே கிட்டத்தட்ட கவுதமசிகாமணிதான் அங்கே வேட்பாளர் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. திமுக-வினரைக் கேட்டால், “இம்முறையும் திருக்கோவிலூர் தொகுதி திமுக-வுக்குத்தான். ஆனால், அமைச்சருக்குப் (பொன்முடி) பதிலாக அவரது பையன் போட்டியிடுவார் போலிருக்கிறது” என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

இது தொடர்பாக திருக்கோவிலூர் ஒன்றிய திமுக செயலாளர் முருகனிடம் கேட்டதற்கு, “கிடைக்கும் சுவர்களில், எங்கள் தலைவரின் படம், சின்னம், கூட்டணிக் கட்சிகளின் கொடி, தலைவர்களின் படத்தை மட்டுமே வரையச் சொல்லியிருந்தோம். சிலர் ஆர்வக் கோளாறில் இப்படி எழுதியுள்ளனர். கவுதம சிகாமணி வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆனால், தலைமை அறிவிக்காமல் நாங்களாக எதையும் செய்ய மாட்டோம்” என்றார். இதே தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றிய திமுக செயலாளர் ரவிசந்திரனிடம் கேட்டதற்கு, “கிராமப்புறங்களில் சிலர் தவறாக எழுதிவிட்டனர். உடனே அதை அழிக்கச் சொல்லி விட்டோம்” என்றார்.

பெயர் சொல்ல விரும்பாத திமுக நிர்வாகிகளோ, “திருக்கோவிலூர் தொகுதிக்கு விருப்ப மனு அளிக்க பொன்முடி அறிவாலயம் சென்றார். ‘இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம்’ என்று தலைமையில் இருந்து சொன்னதாகத் தெரிகிறது. இருந்தாலும் அவரது மகனுக்கு சீட் உறுதியாகி இருக்கிறது. அதனால் தான் இந்த சுவர் விளம்பரங்கள்” என்றனர்.

“மகனுக்கு சீட் உறுதி என்றாலும் அவரை வேறு தொகுதியில் நிறுத்தி விஷப்பரீட்சை செய்துவிடக் கூடாது என்பதாலேயே தனது திருக்கோவிலூர் தொகுதியை மகனுக்காக ஆளுக்கு முந்தி ரிசர்வ் செய்கிறார் போலிருக்கிறது பொன்முடி” என்று தொகுதியில் இருக்கும் பொதுவானவர்கள் கருத்துச் சொல்கிறார்கள். திருக்கோவிலூர் தொகுதியை தங்களின் முன்னாள் எம்எல்ஏ-வான வெங்கடேஷுக்காகத்தான் குறிப்பிட்டுக் கேட்கிறது தேமுதிக. இப்போது, பொன்முடியின் மகனுக்காக இந்த தொகுதி ரிசர்வ் செய்யப்படுவதால் திருக்கோவிலூருக்குப் பதிலாக வெங்கடேஷை வேறு தொகுதியில் நிறுத்த தேமுதிக தலைமை சமாதானம் பேசிவருவதாகச் சொல்கிறார்கள்.

மகனுக்கு வழிவிடுகிறாரா பொன்முடி? - சொல்லாமல் சொல்லும் சுவர் விளம்பரங்கள்
“பழனிசாமி, அண்ணாமலை போல எங்களுக்கு பேசத் தெரியாது” - செல்வப்பெருந்தகை சொல்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in