சென்னை: இடைத்தேர்தலில் தனித்துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி இரு தொகுதிகளிலுமே படுதோல்வியை சந்தித்து டெபாசிட்டை பறிகொடுத்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.ஜானகிராமன் வெறும் 2,709 வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடந்த 2026 பொதுத்தேர்தலில் இதே தொகுதியில் அவர் பெற்ற 5,268 வாக்குகளில் பாதியை மட்டுமே இம்முறை பெற முடிந்தது.
அதேபோல தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளர் எம்.கார்த்திகா 5,268 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். கடந்த பொதுத்தேர்தலில் இங்கு அக்கட்சி வேட்பாளர் திவ்யா வாங்கிய 6,026 வாக்குகளைவிடவும் இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்து வாக்கு வங்கி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்த நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் டெபாசிட் இழந்தது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின்போது சீமானின் பேச்சை கேட்க கூடும் கூட்டமும் மில்லியன் கணக்கிலான சமூகவலைதள வியூஸ்களும் வாக்குகளாக மாறவில்லை என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கட்சித் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.