தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணனிடம் வெற்றிச் சான்றிதழ் பெறும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்த். படம்: எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். வேட்பாளர் அசோக் ஆனந்த் அமோக வெற்றி

திமுக உட்பட இதர 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேதுசெல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம் மற்றும் சுயேச்சைகள் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 21,756 பேர் வாக்களித்தனர். 80.81 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தைவிட 8,482 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அசோக் ஆனந்துக்கு 13,358 வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்துக்கு 4,876 வாக்குகளும், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு 2,664 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீமுக்கு 310 வாக்குகளும் கிடைத்தன. 5-ம் இடத்தை நோட்டா பிடித்தது. நாம் தமிழர் கட்சி, நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் வேட்பாளரை தவிர்த்து திமுக உட்பட இதர 9 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

SCROLL FOR NEXT