புதுச்சேரி: புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன.
புதுச்சேரியில் முதல்சுற்றாக மண்ணாடிப்பட்டு, ஊசுடு, வில்லியனுார், கதிர்காமம், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, நிரவி திருபட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய 17 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
அதில் என்.ஆர் காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமியும், முத்தியால்பேட்டில் வையாபுரி மணிகண்டனும், அரியாங்குப்பத்தில் அய்யப்பனும், ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவும் முன்னிலையில் உள்ளனர்.
அதேபோல் வில்லியனூரில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமார், திமுக மாநிலசெயலர் சிவாவை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார். ஏம்பலத்தில் மோகன்தாஸ் தனது உறவினரான காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமியை விட கூடுதல் வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார். காரைக்கால் வடக்கில் அமைச்சர் திருமுருகனும் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஊசுடு தொகுதியில் கார்த்திகேயனும், லாஸ்பேட்டில் வைத்தியநாதனும் முன்னிலையில் உள்ளனர். மண்ணாடிப்பட்டில் பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை பெற்றுள்ளார்.
உப்பளம் தொகுதியில் அதிமுக மாநில செயலர் அன்பழகனும், நெல்லித்தோப்பில் திமுக வேட்பாளர் கார்த்திகேயனும் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களில் மாஹேயில் அசோக்குமாரும், நெடுங்காட்டில் விக்னேஷ்வரனும், கதிர்காமத்தில் அழகு என்ற அழகானந்தமும் முன்னிலையில் உள்ளனர்.
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி முன்னிலையில் உள்ளார். தவெக 2-ம் இடத்திலும், 3-ம் இடத்தில் சுயேட்சையும் இடம் பிடித்து 4-வது இடத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம் உள்ளார்.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தலைவர் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத்தலைவர் ரங்கசாமிக்கும், காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கத்துக்கும் இடையே போட்டி நிலவியது.
முதல் சுற்று முடிவில் ரங்கசாமி 6839 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகத்தின் விநாயகம் 3248 வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் சேதுசெல்வம் 2633 வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் 1993 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார்.