சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் சம்பந்தப்பட்ட முன்னாள் துணைவேந்தர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ஆர்.வேல்ராஜ் முறைகேடு புகார் காரணமாக கடந்தாண்டு பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வேல்ராஜ், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்தார்.
இதை ஏற்று இடைநீக்க உத்தரவை ரத்து செய்து கடந்தாண்டு செப்.5 அன்று ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் வி.குமரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்ஸன் வில்சன், வாதிடும்போது, முன்னாள் துணைவேந்தரான வேல்ராஜ் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளின்பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் வேல்ராஜூக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மன்றக்குழுவின் விளக்கத்தைக் கோராமல் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டு இடைநீக்க உத்தரவை ரத்து செய்துள்ளார். இது சட்டவிரோதமாகும் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இது தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தரப்பிலும், முன்னாள் துணைவேந்தரான ஆர்.வேல்ராஜ் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.