சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதேநேரம், வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் இன்று தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.
மேலும், மத்திய கேரளம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை சுமார் 1.5 கிமீ உயரத்துக்கு ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 5 செ.மீ. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், விருதுநகர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி,
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் 4 செ.மீ. புதுச்சேரி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.