சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், “வடகிழக்கு பருவமழைக்கான பருவகால கண்ணோட்ட மன்றம் - 2026” தொடக்க விழா சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்தரமோகன் பங்கேற்று பேசியதாவது: மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தற்போது 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்களைக் கொண்டுள்ளது. மேலும், 1,000 தானியங்கி மழைமானிகளைச் இந்த ஆண்டு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது 2 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 1,030 அதிக மற்றும் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களையும், மேலும் 1,003 நடுத்தர பாதிப்புக்குள்ளாகும் இடங்களையும் தமிழ்நாடு பேரிடர் மற்றும் பாதிப்பு குறைப்பு முகமை அடையாளம் கண்டுள்ளது.
ஒவ்வொரு இடத்துக்கும் வெள்ளத் தணிப்பு மற்றும் மீட்புத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்கு ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை மையம் மூலம் 3 நாட்களுக்கு முன்பே தெரு அளவிலான வெள்ள முன்னறிவிப்பும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா பேசும்போது, ” தென்மேற்கு பருவமழை விலகிய பின்னர், வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 3-வது வாரத்தில் 15 முதல் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் இயல்பான மழை முதல் இயல்பை விட அதிகமான மழையும், மீதமுள்ள மாவட்டங்களின் இயல்பை விடக் குறைவான மழை பெய்யலாம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் டி.சிவானந்த பை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், புனே வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்புத் துறை தலைவர் ஓ.பி.ஸ்ரீஜித், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆர்.வி.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இதற்கிடையில், “அக்.12-ம் தேதி வாக்கில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அதன் தாக்கத்தால் அந்தமான் கடல் பகுதியில் 13-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இது 15-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற குறைவான வாய்ப்புகளே உள்ளன” என்று இந்திய வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.