கோப்புப்படம்
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்துக்கும் மேலாக இருந்த குழந்தைப் பிறப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் குழந்தை பிறப்பு 8 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் நிகழும் பிரசவங்களில் 50 சதவீதத்துக்கு மேல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிலையில், அந்த எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024- 25-ம் ஆண்டில் தமிழகத்தில் 7,99,962 குழந்தைகள் பிறந்தன. இவற்றில் 4,43,123 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெற்றன. அவற்றில் 2,33,162 சுகப் பிரசவங்களாகவும், 1,99,254 அறுவை சிகிச்சைகள், 10,707 மருத்துவ உதவிகள் மூலமாகவும் நடைபெற்றுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற 3,56,839 பிரசவங்களில் 1,21,597 சுகப் பிரசவங்களாகவும், 2,19,239 அறுவை சிகிச்சைகள், 16,003 மருத்துவ உதவிகள் மூலமாகவும் நடைபெற்றுள்ளன.
தொடர்ந்து, 2025- 26-ம் ஆணடில் தமிழகத்தில் 7,82,517 குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து 4,04,397 ஆக உள்ளது. இவற்றில் சுகப் பிரசவங்களின் எண்ணிக்கையும் 1,98,181 ஆக சரிந்துள்ளது.
அறுவை சிகிச்சையில் 1,96,523, மருத்துவ உதவியுடன் 9,693 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை 3,78,120 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் சுகப் பிரசவங்கள் 1,26,127 ஆகவும், அறுவை சிகிச்சைகள் 2,35,068 ஆகவும், மருத்துவ உதவியுடன் 16,925 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்தத் தகவல்கள் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள ஆண்டு கையேட்டில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலகத்தினர் தெரிவித்தது: குழந்தை பிறப்பு குறைவது, செயற்கை கருத்தரித்தலுக்கான தொடர் சிகிச்சைகள் போன்ற காரணங்களால், பிரசவத்துக்காக மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.