சென்னை: ‘தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; பொதுமக்களிடம் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்குதலால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகவும், அதன் விலை உயரப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள
பெட்ரோல் பங்க்குகளில் நேற்று முன்தினம் இரவு முதலே குவியத் தொடங்கினர். குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பைக்குகள், கார்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, எரிபொருளை நிரப்பினர்.
எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ராயப்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது. சிலர் கேன்களில் பெட்ரோல் வாங்க வந்தனர். அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்ததால், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள பங்க்குகளில் பெருமளவில் மக்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில், சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் பைக்குகள், கார்களை அருகே உள்ள மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இதனால், ஆலந்தூர், பரங்கிமலை, சென்ட்ரல், கோயம்பேடு உள்பட பல மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த முடியாமல் வழக்கமாக வரும் பயணிகள் சிரமப்பட்டனர்.
எரிபொருள் இருப்பு குறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர் சங்க மாநிலத் தலைவர் முரளி கூறியதாவது:
90 நாட்களுக்கு இருப்பு: நாடு முழுவதும் அடுத்த 90நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளிலும் விநியோகம் சீராக நடைபெறுகிறது. மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்குவதால் செயற்கை தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்படக்கூடும். மேலும், கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்குவது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் உள்ள 14 முனையங்களில் 21 நாட்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. மேலும், நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகள் சீராக உள்ளன. வாடிக்கையாளர்கள் வதந்திகளைப் புறக்கணித்து, எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறும்போது, “தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். இதனால், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
பதற்றம் அடைய வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, 2 நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.