புதுச்சேரி: “தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. அதுபோன்ற நிலை புதுச்சேரியில் இல்லை” புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆலோசனை நடத்தினார். காவல் துறை தலைமையகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி ஷாலினிசிங், டிஐஜி சத்தியசுந்தரம், துறை செயலர் ராஜீவ் சுக்லா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் புதுச்சேரியின் சட்டம் - ஒழுங்கு சம்பந்தமான அறிக்கையை அமைச்சரிடம், டிஜிபி சமர்ப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: “கடந்த மாதம் காரைக்காலில் 6 கிலோவுக்கு அதிகமான மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் காணாமல் போன சிறுமிகள் 2 மணி நேரத்துக்குள்ளாக மீட்கப்பட்டனர். அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கான ஊதிய பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது சம்பந்தமாக ரூ.3 கோடியை மீட்க சைபர் க்ரைம் நடவடிக்கை எடுத்தது. மீதம் உள்ள பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளோடு தகுந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.
நீண்ட காலம் பணியில் இருக்கும் காவலர்கள், உயர் அதிகாரிகளை இடமாறுதல் செய்தவற்கான முன்மொழிவும் துறையின் ஆலோசனையில் இருக்கிறது. பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது, 2-வது ஐஆர்பிஎன் படைபிரிவை உருவாக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி மூலம் பொது தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நகரப்பகுதியில் 22 சிக்னல்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலம் சைபர் க்ரைம் குற்றங்களை கண்டறிவதில் இந்தியாவில் 2-வது மாநிலமாக இருக்கிறது. ஆனால் விபத்து நடப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். குறைந்த மக்கள் தொகை உள்ள புதுச்சேரியில் இதுபோன்ற நிலை இருக்கிறது.
நீதிமன்றத்தில் இதனை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை” என்றார்.
அப்போது, புதுச்சேரியில் மின்வெட்டு அதிகமாக இருக்கிறது என்று தமிழக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “ஆரம்ப காலத்தில் மின்வெட்டு இருந்தது. அது நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு, அது தொடர்பான பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தையும், புதுச்சேரியையும் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் ஒன்றுமே இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. அதுபோன்ற நிலை புதுச்சேரியில் இல்லை. ஆகவே, அமைச்சர் செங்கோட்டையன் சொன்னதை நீங்கள் பொய் குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.
மேலும், “ஆளுநர், முதல்வர் இடையே உறவு சிறப்பாக இருக்கிறது. விரிசல் அடைய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். பொதுவாக கோப்புகள் ஒப்புதல் ஆகவில்லை என்று சொல்லக்கூடாது. எந்த கோப்பு ஒப்புதல் ஆகவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
ஏனாம் புயல் நிவாரணம் தொடர்பாக ஆளுநர், முதல்வர் கலந்து முடிவு செய்து, விரைவில் அதற்கு உரிய தொகை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.