முதல்வர் விஜய் குறித்து அவதூறு பதிவிட்டதாக கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பதிவிட்டதாக கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on: 
1 min read

சென்னை: தமிழக முதல்வர் விஜய் குறித்து எக்ஸ் தளத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பதிவிட்டதாகக் கூறி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு எதிராக மயிலாப்பூரைச் சேர்ந்த தவெக மகளிரணி நிர்வாகி பிரசன்னா, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்துள்ள மனுக்களை சைதாப்பேட்டை நீதிமன்றமும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கணேஷ், ‘ராஜகோபாலுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை. அதனால், மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், அமர்வு நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது’ என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்க மறுப்பதற்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கோ அதிகாரமில்லை’ எனக் கூறி, ராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன், தேவைப்படும்போது மனுதாரர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பதிவிட்டதாக கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 4 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

X