கோப்புப் படம் 
தமிழகம்

தஞ்சையில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: தஞ்சாவூரில் காவிரி டெல்டா கிராமங்களில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் ராயமுண்டான்பட்டியைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. திருவையாறு தாலுகா ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனவெளி, சாத்தனூர் மற்றும் பூதலூர் தாலுகாவில் மகாராஜபுரம், புதுகிரி வனரங்குடி, கழுமணங்குளம், கல்லாப்பெரும்பூர் கோவிலாடி மற்றும் சுக்கம்பர் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்டா பகுதிகளில் மணல் அள்ளக்கூடாது என்றும், சட்டவிரோத மணல் குவாரியால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பீட்டை மதிப்பீடு செய்யவும் உத்தரவிட வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்து. மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிடுகையில், “காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை தொடர்ந்து அனுமதித்தால் வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் 440335 கன மீட்டர் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை லாரிகளில் 2,65,174 கனமீட்டரும், மாட்டு வண்டிகளில் 914.51 கன மீட்டரும் மணல் அள்ளப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளப்படவில்லை. தற்போது மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் குறிப்பிட்ட கிராமங்களில் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இனிமேல் மணல் அள்ளக்கூடாது. மணல் குவாரிக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலிக்கக்கூடாது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் எக்காரணம் கொண்டும் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT