மதுரை: “திமுக அரசைக் கண்டித்து விசிகவை போல் யாரும் போராட்டங்களை நடத்தியதில்லை” என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய நாவலான ‘கறுப்பு ரட்சகன்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் செம்மலர் தலைமை வகித்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட, அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் பெற்றுக்கொண்டார். ‘எவிடென்ஸ்’ கதிர் ஏற்புரையாற்றினார். திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிக்குமார், இரா.சரவணன், எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியது: “வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி தொடர்பாக நான் எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். திமுக மீதும் எங்களுக்கும் விமர்சனம் உண்டு. நீங்கள் திமுகவை உயர்த்தி பிடிக்கிறீர்கள் என சிலர் குறை கூறுகின்றனர்.
தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு உண்மையாகவும், ஏற்ற கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாமலும், இயக்கம் வலிமையோடு செயல்படுவதற்கேற்ற முடிவு எடுக்கும் நிலை உள்ளது. எந்த பின்புலமும் இல்லாமல் மதுரையில் 20 பேரை கொண்டு தொடங்கிய அரசியல் வாழ்க்கை, இன்று லட்சக்கணக்கானவர்கள் திரளும் கூட்டமாக 30 ஆண்டுகளில் பரிணமித்திருக்கிறோம்.
கூட்டணி என்பதற்காக மக்களை மறந்து என்னுடைய நலன் குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசை கண்டித்து விசிக நடத்திய போராட்டங்களைபோல் எந்தக் கட்சியினரும் நடத்தியிருக்க முடியாது. மதுரையில் நான் அரசை கண்டித்து பேசியது தொடர்பாக, தமிழக முதல்வரே ஏன் பொதுவெளியில் அரசை குற்றம் சுமத்தி பேசுகிறீர்கள் என என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.
பெரியார் பிற்படுத்தப்பட்டோர் கட்சிகளின் தலைவராகத்தான் இருந்தார். விசிக அம்பேத்கரோடு, பெரியாரையும் இணைத்து படம் ஒட்டியதால்தான் அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஆதரித்தனர். அம்பேத்கரை சாதியவாதியாக கம்யூனிஸ்ட்கள் பார்த்த காலம் உண்டு. அந்த காலக் கட்டத்தில் அம்பேத்கரை கடுமையாக தோழர்கள் விமர்சிப்பார்கள். இடதுசாரி இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்களுக்கு உள்ள இடைவெளியை குறைத்தவன் நான்.
தற்போது மதுரையை குறிவைத்து சனாதன நகரமாக மாற்றப் பார்க்கிறார்கள். தேர்தலை பற்றி தேர்தலின்போது மட்டுமே சிந்திப்பேன். நான் முதல்வர் நாற்காலியில் உட்கார ஆசைப்படவில்லை. பதவி எனக்கு பெரிதல்ல. நான் 10 சீட் கூடுதலாக கேட்டு வாங்குவதால் புரட்சி ஏற்படப்போவதில்லை. பதவி, எம்எல்ஏ சீட்கள் பெரிது என நினைத்திருந்தால், எங்கு அதிகமாக கொடுக்கிறார்களோ அந்த இடம் தேடி ஓடியிருப்பேன்.
எனக்கு பதவி ஆசை, பொருள் ஆசை இல்லை. இடதுசாரிகள் முற்போக்கு சக்திகளாக இருப்பதால் எந்த ஆதாயமுமின்றி இணைந்திருக்கிறோம். உண்மையான தமிழ் தேசியம் என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதை தடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.