மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

“மேகேதாட்டு விவகாரத்தில் இயற்கையின் விதியை மாற்றும் சக்தி கர்நாடக அரசுக்கு இல்லை” - மு.வீரபாண்டியன்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “எவ்வளவு வலுவான அணையை கட்டினாலும், அந்த அணையை உடைத்துக்கொண்டு காவிரி அன்னை தமிழ் மண்ணுக்கு தான் வருவாள். இயற்கையின் விதியை மாற்றுகிற சக்தி, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இல்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாணடியன் தெரிவித்தார்.

கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநில கூட்டத்தில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவை குறைக்கக் கூடாது, மத்திய அரசு குடும்ப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதை குறைப்போம் என அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

நெய்வேலி பங்குகள் 3% விற்பது என்பதும் ஏற்க இயலாது. தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நிதி நிலை சீராகிறபோது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றலாம். அதற்கு முன்னால் அதிகாரிகள், விவசாயிகளிடம் வசூலில் ஈடுபடாமல் இருக்க முதல்வர் தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும்.

கரூரில் மனிதாபிமான அடிப்படையில், உயிரிழந்த குடும்பங்களுக்கு வேலை தரலாம். அது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிலை. சட்டத்தின்படியான ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் வாக்களித்து அதிகாரத்தைத் தருகிறார்கள். இந்த அதிகாரத்தின் மீது ஆளுநர் ஏறி அமரக்கூடாது. ஆளுநர் சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும். இது போன்று ஆளுநர் நடந்துகொள்ளக் கூடாது.

தவெகவை நாங்கள் வெளியிலிருந்து ஆதரிக்கிறோம், அரசியலுக்காக. மக்கள் அளித்த தீர்ப்பை மதித்தோம. எங்களுக்கு சோபாவும் வந்ததுமில்லை, கல்லாப்பெட்டியும் வந்ததுமில்லை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

ஆங்கிலம் மொழி, அறிவல்ல. அறிவை வளர்க்க அது துணை புரியுமே அன்றி, ஆங்கிலமே அறிவல்ல. எனவே, தாய்மொழி தமிழ் மொழியை வளர்க்க அவர் உரையாடல் செய்திருக்க வேண்டும், அந்த ஆங்கில உரையாடலை தவிர்த்திருக்க வேண்டும்.

டாஸ்மாக் படிப்படியாக மூடப்பட வேண்டிய ஒன்று. மதுப்பழக்கம் இல்லாத ஒரு தமிழகத்திற்காக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். காவிரி, மேகேதாட்டு, இறையான்மை, மதச்சார்பின்மை, கூலி மக்கள், ஏழை மக்கள் இவர்களின் கோரிக்கைகளுக்காக நாங்கள் வரும் ஆக.6-ம் தேதி தொடங்கி வரும் 15-ம் தேதி வரை இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

கடலூரில் நடைபாதையில் இருக்கிற வியாபாரிகளை நிர்வாகம் அப்புறப்படுத்தியிருக்கிறது. அது கூடாது என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் துரை உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ஒன்றுபட்டிருக்க வேண்டும். காவிரி நீர் என்பது நமது உரிமை. எதன் பொருட்டும் அணை கட்டக் கூடாது. எவ்வளவு வலுவான அணையை கட்டினாலும், அந்த அணையை உடைத்துக்கொண்டு காவிரி அன்னை தமிழ் மண்ணுக்குத் தான் வருவாள். வேறு எங்கும் திசை திருப்ப முடியாது. காவிரியின் திசை தமிழகம் நோக்கித் தான், டெல்டாவை நோக்கித் தான். அந்த இயற்கையின் விதியை மாற்றுகிற சக்தி, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இல்லை என்றார் அவர்.

SCROLL FOR NEXT