தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதிமுக கூட்டணியில் சிறு கடுகளவு கூட பிரச்சினை இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 2023 டிசம்பரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன.
நான்கு மாவட்டங்களுக்கும் நான் நேரில் சென்று மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினேன். ஆனால் முதல்வர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆறுதல் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல. தூத்துக்குடி மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்கள் கழித்துதான் மக்களை சந்தித்தார்.
அதிமுக ஆட்சியின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் உள்ள பக்கிள் ஓடையை தூர்வாரி சரி செய்ய 80 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சி வந்த பிறகு, அந்த 20 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் செல்லும் ஓடை வழியாக வெள்ளம் வடிந்திருக்கும்.
ஆனால் சரியான முறையில் தூர்வாராததால், வெள்ளம் தூத்துக்குடி நகரில் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் கூட இதை குறிப்பிடுகிறார்கள். விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுவே சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கு சான்று.
விஜய் வேட்பாளர் அறிவிக்கும்போது இருமுனை போட்டி தான் என்று கூறி இருக்கிறார். புதிதாகத்தானே வந்திருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவரது விவரம் தெரியும். அதிமுக கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மனவருத்தத்தில் உள்ளன. மதிமுக முக்கிய தலைவர் பேச்சுவார்த்தை முடித்து விட்டு வெளியில் வரும்போது, அழுதுகொண்டே சிரிக்கிறோம் என்று கூறினார். அப்படிப்பட்ட நிலைமைதான் அந்த கூட்டணியில் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் எந்தவித சிறு கடுகளவு கூட பிரச்சினை இல்லை.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. வேறொருவர் மூலம் 10 சீட் கேட்டார். பின்னர் 5 சீட் கேட்டார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, எங்களுடன் அவர் கூட்டணியில் இல்லை. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கி உள்ளார். அவருக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அவர் அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் இயலாது என்று கூறிவிட்டோம்.
மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவை மீட்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக நீண்டகால குத்தகைக்கு எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கச்சத்தீவை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.