சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மின் நுகர்வு உள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மின் விநியோகத்தில் இதுவரை சிக்கல் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே மிக உச்சபட்ச மின் நுகர்வு தமிழகத்தில்தான் பதிவாகியுள்ளது. 21,000 மெகா வாட் முதல் 23,000 மெகா வாட் வரை மின் நுகர்வு உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமே 18,000 மெகா வாட்டாக உள்ளது. பகல், இரவு நேரங்களில் 21,000 முதல் 22,000 மெகா வாட் வரை தேவை உள்ளது.
12 மணிவரை இருந்த மின் தேவை, தற்போது நள்ளிரவு 1 மணிவரை நீடிக்கிறது. இந்த ஆண்டு 9 சதவீத மின் தேவை வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை தமிழகம் எட்டியுள்ளது. மாநில அரசின் உற்பத்தி, மத்திய அரசு நிறுவனங்களின் மின் பகிர்வு மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.
தமிழகத்தில் 11,000 மெகாவாட் சோலார் மற்றும் 11,000 மெகாவாட் காற்றாலை மின் திறன் உள்ளது. பகல் நேரத்தில் சோலார் உற்பத்தி கைகொடுக்கிறது. காற்றாலை சீசன் இன்னும் தொடங்காத நிலையிலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மின் விநியோகத்தில் இதுவரை சிக்கல் எழவில்லை. இரவு நேரங்களில் மின் தேவையைப் பூர்த்தி செய்யப் பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. சில நேரங்களில் உபரி மின்சாரம் விற்கவும் செய்யப்படுகிறது.
மின் நுகர்வு தொடர்பான புகார்களை விசாரிக்க பீக் ஹவர்ஸ் சமயங்களில் சிறப்புத் துணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் விசிறிகள் முதல் ஏசி வரை பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதும் முக்கியக் காரணமாகும். இரவு நேரங்களில் தொழில் துறையினரின் மின் தேவையும் அதிகரித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளால் மட்டும் மின் தேவை அதிகரிக்கவில்லை; மாறாகக் கோடை வெப்பம் மற்றும் பொதுவான மின்னணு சாதனங்களின் பயன்பாடே முக்கியக் காரணம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மின் விநியோகம் சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.