சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கு வழிவகை இல்லை என்று கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் க.தர்பக ராஜ் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ரேஷன் கடைபணியாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு அண்மையில் கோரிக்கை மனு வந்திருந்தது. அதில், ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தற்போதைய ஊதியம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஊழியர்கள்கூட ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.
எனவே, ஊதிய உயர்வு வழங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும், கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் சிறப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உரிய அளவில் ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படியும் அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே, கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கு வழிவகை இல்லை. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வு தரப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கவும் அரசு விதிகளில் வழிவகை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.