தமிழகம்

“மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” - அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ‘‘மக்களுக்கு எந்த வகையிலும் மழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு வராத வண்ணம் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்’’ என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மழை, வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன், ரமேஷ், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலர்கள் ககன் தீப் சிங், ராஜேஷ் லக்கானி, சந்திரமோகன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், சென்னை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை நீர் தேக்கம், மீட்புப் பணிகளின் நிலவரம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பது மற்றும் நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். மண்டல வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற முதல்வர் விஜய், பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இரவு பகல் பாராமல் பணியாற்றிய ஊழியர்களைப் பாராட்டி அவர்களை ஊக்குவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT