சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திடும் நோக்கத்தில் அக்கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று இணைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்வதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.