“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை” - என்டிஏ-வில் மீண்டும் ஐக்கியமான டிடிவி தினகரன்
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே, டிடிவி தினகரன் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையே சந்திப்பு நடைபெற்றது கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இப்போது டிடிவி தினகரன் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது. பழனிசாமி இருக்கும் கட்சியில் கூட்டணியில் இருப்பதற்குப் பதில் தூக்கில் தொங்கிவிடலாம் என தே.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், கடும் விமர்சனங்களை முன்வைத்ததை மறந்திருக்க முடியாது.
தற்போது, அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. சென்னையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் டிடிவி தினகரன் இதனை அறிவித்தார்.
தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் எல்,முருகன், பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழக நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய ஓரணியில் சேர்கிறோம்.
‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே, டிடிவி - பியூஷ் இடையே சந்திப்பு நடைபெற்றது கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் (ஜன.23) பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அதற்குள் தமிழக தேர்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவர்களையும் மேடை ஏற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்தான் அமமுக இணைப்பு நடந்துள்ளது.
