அமைச்சர் நிர்மல்குமார்
திருநெல்வேலி/மதுரை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினால் ஒருமித்த கருத்து ஏற்படாது என்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் மின்சார கட்டணம் தொடர்பாக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள
தாக, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது உண்மையல்ல. பொதுமக்களிடம் இருந்து அவ்வாறு எந்தப் புகாரும் வரவில்லை. மாறாக, மின்கட்டண உயர்வு தொடர்பாக நிர்வாக ரீதியாக தானாக முன்வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுழற்சி முறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், 50 இணைப்புகளில் மட்டுமே கட்டண மாற்றம் இருந்தது. அதுவும், வீடுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் ஏற்பட்ட மாற்றமே தவிர வேறு காரணமில்லை. இந்த ஆய்வுப் பணியை ஒரு வாரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணியாளர்களை நியமிக்கவில்லை. மின் பணியாளர்களை நியமிக்கும் பணியை தற்போதைய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்பிறகு மாதந்தோறும் மின்கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக உள்பட எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன.
திமுக ஆட்சியில் இருந்தபோது, நமக்கு இருந்த வலுவான சட்டப்பிடியை இழந்துவிட்டோம். திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதுகூட தீர்ப்பாய தீர்ப்பை முழுமையாக அமல் படுத்த முடியவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையேயான இப்பிரச்சினையில் மத்திய அரசு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகத்துக்கு ஆதரவாக பேசுவது கண்டனத்துக்குரியது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து, முதல்வர் விரைவில் அறிவிப்பார். அதே வேளையில் உச்ச நீதிமன்றம் மூலமாக காவிரி விவகாரத்தை அணுகுவதுதான் சரியான வழிமுறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆக. 3-ல் உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என்று அறிவித்தவுடன் தற்போது கர்நாடக அரசு 3,500 கனஅடி திறந்துள்ளது. இன்னும் தரவேண்டிய 17 டிஎம்சி தண்ணீரை தர மறுக்கின்றனர். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுதான் நிரந்தர தீர்வாகும்.எந்த வகையிலும் முதல்வர் தண்ணீர் கொண்டுவந்து விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியுடன் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பாஜகவோடு சேர்ந்து கொண்டு திமுக, அதிமுக தமிழகத்துக்கு எதிராக செயல்படுகின்றன. இவர்களை வைத்துக்கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எப்படி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியும். வரும் பட்ஜெட்டில் ரூ.2,500 உரிமைத்தொகை உள்பட சாத்தியக்கூறுள்ள திட்ட அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு கூடுதலாக மின் இணைப்புகள் வழங்கவும் ஆராய்ந்து வருகிறோம். அது தொடர்பாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.