சென்னை உயர் நீதி​மன்​றம்

 
தமிழகம்

கோயில் நிதியில் கல்லூரி கட்ட தடையில்லை: திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கோ​யில் நிதி​யில் கல்​லூரி தொடங்க முந்​தைய திமுக ஆட்​சி​யில் பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. கோயில் நிதி​யைக் கல்விக்​காகப் பயன்​படுத்​தலாம் என்று உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் சார்​பில் கொளத்​தூரிலும், திருச்​செங்​கோடு அர்த்​த ​நாரீஸ்​வரர் கோயில் நிதி​யில் திருச்​செங்​கோட்​டிலும், பழநி தண்​டா​யுத​பாணி கோயில் நிதி​யில் தொப்பம் பட்டியிலும், திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் சார்​பில் விளாத்​தி​குளத்​தி​லும் என 4 இடங்​களில் கல்​லூரி​கள் தொடங்க அனு​மதி அளித்து இந்து அறநிலையத் துறை செயலர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் அரசாணை பிறப்​பித்​தார்.

இந்த அரசாணைக்​குத் தடை கோரி​யும், அதை ரத்து செய்​யக் கோரி​யும் சென்​னையைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் ஆகி​யோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பரணிதரன், “கோ​யில் நிதியில் கொளத்​தூர், தொப்பம்பட்டியில் கல்​லூரி​கள் அமைக்​கப்​பட்டு 3 பேட்ச் மாண​வர்​கள் படிப்பை முடித்​து​விட்​டனர்.

திருச்​செங்​கோடு, விளாத்​தி​குளத்​தில் கல்​லூரி​கள் கட்டப்படுகின்றன. அந்தக் கல்லூரிகள் தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அந்த கல்​லூரி​களில் இந்து சமய படிப்​பு​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன” என்று தெரி​வித்​தார்.

மனு​தா​ரர் டி.ஆர்​.ரமேஷ், “கோ​யில் நிதி​யைக் கல்​லூரி​கள் கட்ட பயன்​படுத்​து​வதற்​கான நடை​முறை​கள் பின்​பற்​றப்​பட​வில்​லை” என்று தெரி​வித்​தார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “கோ​யில் நிதி​யைக் கல்விக்​காக பயன்​படுத்​தலாம்” என்று கூறி வழக்கை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர். மேலும், விளாத்​தி​குளம், திருச்​செங்​கோடு ஆகிய இடங்​களில் கல்​லூரி கட்ட கூடு​தல் நிதி தேவைப்​பட்​டால் அரசின் உதவியை நாடலாம். மீத​முள்ள கல்​லூரி​களைக் கட்​டு​வது தொடர்​பாக அரசே முடி​வெடுத்​துக் கொள்​ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT