சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 27 பிடிஎஸ் இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தி மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்யலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
நடப்பாண்டில் இந்த படிப்புகளில் சேருவதற்கு 72,194 பேர் தரவரிசைப் பட்டியலில் தகுதி பெற்றனர். இதுவரை 4 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் 25 எம்பிபிஎஸ் மற்றும் 27 பிடிஎஸ் என 52 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கு, தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அனுமதி கேட்டது. அதற்கு, காலியாகவுள்ள பிடிஎஸ் இடங்களை மட்டுமே நிரப்பிக்கொள்ள ஆணையம் அனுமதி வழங்கிஉள்ளது.
அதன்படி, ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்களில், நீட் தேர்வில் 113 மதிப்பெண் உடையோர் முதல், பிடிஎஸ் படிப்புக்கான இடத்தை https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் டிச.15-ம் தேதி வரை தேர்வு செய்யலாம். அதற்கான முடிவுகள், 16-ம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்றவர்கள், 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலர் லோகநாயகி கூறும்போது, “தற்போது 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சேர விரும்பும் மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இடங்கள் ஒதுக்கீடு செய்து, கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில், முன்வைப்பு தொகை நிகர் செய்யப்படும்.
இடங்கள் கிடைக்காதவர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்குக்கே பணம் திரும்ப அனுப்பப்படும். இடம் ஒதுக்கீடு செய்தபின், கல்லூரியில் சேராதவர்களுக்கு அப்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. காலியாகவுள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது” என்றார்.