

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரது மகளும் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரது மகளும் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: 324 சமுதாயங்களும் வாழ வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். தமிழகம்தான் இந்தியாவுக்கு சமூகநீதியின் வழிகாட்டி என்று சொல்கிறோம்.
இடஒதுக்கீடு வழங்கினால் அந்த பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குதான் கிடைக்கும். இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் எவ்வளவோ செய்துவிட்டோம். இதற்கு மேல் ஏதாவது செய்தால், அது மக்களை பாதிக்கும்.
பாமக என்பது ஒரே கட்சிதான்: தேர்தல் வரக்கூடிய இந்த நேரத்தில் இடஒதுக்கீடு கொடுத்தால், ஆளுங்கட்சிக்குதானே நன்மை கிடைக்கும். அதை செய்ய எது தடுக்கிறது? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இதனால், எல்லா சமுதாயமும் மகிழ்ச்சி அடையும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள். இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சரியான இடஒதுக்கீட்டை இம்மாத இறுதிக்குள் பகிர்ந்து கொடுங்கள். பாமக என்பது ஒரே ஒரு கட்சிதான்.
அது, இது என்று சொல்லி ஏமாற்றுவார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள். எங்களுக்கு வேஷம் போடத் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார். ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பேசும்போது, “ராமதாஸ்தான் நம்முடையே ஒரே தலைவர்.
இதற்கிடையே ‘நான்தான் தலைவர், தலைவி’ என்று கூறிக்கொண்டு சொகுசு பயணம் செய்பவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தே கிராமங்கள்தோறும் சென்று இயக்கத்தை கட்டிக்காத்தவர் ராமதாஸ். அவரை மறந்துவிட்டு, கட்சியை பிளவுப்படுத்தி வருகிறார்கள். இதனை முறியடிக்க ராமதாஸ் கரத்தை வலுப்படுத்தவேண்டும்” என்றார்.