தமிழகம்

திருமுறைகளை செல்போன் செயலி வடிவில் இளைஞர்களிடம் சேர்க்கும் தருமபுரம் ஆதீனம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ஓலைச் சுவடிகள், செப்பேடுகளில் உள்ள திருமுறைகளை செல்போன் செயலி வடிவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் தருமபுரம் ஆதீனத்தின் பணி பாராட்டுக்குரியது என்று, சென்னையில் நடைபெற்ற தெய்வச் சேக்கிழார் விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை, திருவான்மியூரில் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் சார்பில், 34-வது ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

விழாவில், சிவாலயம் பதிப்பித்த'தருமை ஆதீன பன்னிரு திருமுறைகள்', வென்றிமாலைக் கவிராயர் அருளிய 'திருச்செந்தூர் தலபுராணம்' ஆகிய நூல்களை திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டார். முதல் பிரதியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது: 'பன்னிரு திருமுறைகள்', 'திருச்செந்தூர் தலபுராணம்' ஆகிய நூல்களைப் பெற்றுக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருமுறைகளில் அற்புதமான பல தமிழ்ச் செய்யுள்கள் உள்ளன. திருமுறைகளுக்கு பல அரசர்கள் முக்கியத்துவம் தந்துள்ளனர். பல்வேறு கோயில்களில் அதை பாடவும் செய்துள்ளனர். காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதிப் பாடல்கள் அக்காலத்தில் முன்மாதிரியாகத் திகழ்ந்தன. மகேந்திரவர்ம பல்லவன் சைவ சமயத்துக்கு மாறிய நிகழ்வு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதை சேக்கிழாரின் பெரிய புராணம் அழகாக எடுத்துரைக்கிறது.

தெய்வ முயற்சியால் தமிழகத்தில் பல்வேறு செப்பேடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால், ஓலைச் சுவடிகள், செப்பேடுகளில் இருப்பதை நம் இளைஞர்களுக்கு படிக்கத் தெரியாது. அவர்களது கையில் செப்பேடுக்கு பதில் செல்போன்தான் உள்ளது. இத்தகைய சூழலில், ஓலைச் சுவடிகள், செப்பேடுகளில் உள்ள திருமுறைகளை செல்போன் செயலி வடிவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் தருமபுரம் ஆதீனத்தின் பணி பாராட்டுக்குரியது.

தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து கவுரவம் அளித்து வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உருவாக்கப்பட்டபோது, தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஆதீனகர்த்தர்களுடன் சென்று பிரதமர் மோடி அங்கு செங்கோலை வைத்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. அதேபோல, முதல்முறையாக இந்த ஆண்டு ஓதுவாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுர விக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT