தமிழகம்

ஆளுநர் ஆலோசனைக் கூட்டத்துக்கு மதுரை ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் சென்றதன் பின்னணி என்ன?

அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் செய்வதாக சலசலப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமையில்லை. தவெக அரசு என்றைக்கும் அதை அனுமதிக்காது,” என்று அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘அப்படியென்றால் யார் சொல்லி மதுரை ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை செய்தனர்?’ என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ஆளுநர் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் செய்கிறாரா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

மதுரைக்கு நேற்று வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேகர், சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் பங்கேற்றார். அப்போது மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோரை வரவழைத்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி இதுபோல் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்கள் போட்டபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்ப, கடைசியில் அவற்றை அப்போதைய ஆளுநர் கைவிட்டார். தற்போது அவரைப் போலவே, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேகர் ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி, விடுதலை சிறுத்தைகள் அமைச்சர் வன்னியரசு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆட்சியர் தரப்பில் இருந்து நேற்று இரவு 9.40 மணியளவில், ஆளுநரை ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று காலையில் விமான நிலையம் வந்து இறக்கியபோதே ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொடுத்து வழங்கினார். அப்படி இருக்கையில் மீண்டும் எதற்காக, விருந்தினர் மாளிகைக்கு தனியாகச் சென்று ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சந்தித்தினர் என்ற சர்ச்சையும், கேள்வியும் எழுந்தது. 

இந்த ஆய்வு விவகாரம் தொடர்பாக தவெக அரசு இன்று காலை வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது. 

இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் பேசுகையில், ‘‘எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,’’ என்றார்.

ஆளுநகர் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு இதுதான் என்றால், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் யார் சொல்லி, ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று காலை மதுரை வந்தபோதே, ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யும்படி தகவல் வந்தது. அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர்.

இந்த தகவல் வெளியாகி சர்ச்சையானதும், ஆய்வுக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மட்டும் ஆளுநரை சந்தித்து மதுரையின் பல்வேறு விவகாரங்களைப் பற்றி பேசியுள்ளனர்.

தற்போது ஆளுநரின் இந்த ஆலோசனைக் கூட்டமும் தவெக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சியின் நிலைப்பாட்டை தவெக அரசு கடைபிடிக்கிறதா அல்லது ஆளுநர் ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்களுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தாமல் சுமுகமாக செயல்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தலைமைச் செயலக ஒப்புதல் இல்லாமல் ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க வாய்ப்பில்லை. ஆளுநர் விவகாரம் சர்ச்சையானதும் தலைமைச் செயலக வழிகாட்டுதல் அடிப்படையிலே ஆட்சியர் விளக்கமும் கொடுத்துள்ளார்.

அப்படி இருக்கையில், அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார், எதுவுமே தெரியாததுபோல், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். நிர்மல் குமார் தெரிந்து இப்படி பேசுகிறாரா அல்லது தெரிந்தே பொய் சொல்லி இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக இரட்டை வேடம் போடுகிறாரா என்பது தெரியவில்லை.

அப்படி தவெக அரசு அரசு சொல்லாமல், அவர் விருந்தினர் மாளிகையில் 20 நிமிடங்கள் ஆளுநரை சந்தி்த்து ஆலோசனை செய்திருந்தால் இந்நேரம் அவரை இடமாற்றம் செய்து இருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாததால்தான் ஆட்சியர் இன்று பதவியில் தொடர்கிறார்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT