தமிழகம்

“திமுகவும் அதிமுகவும் பாஜகவுடன் இணைந்தாலும் ஆச்சரியமில்லை” - அமைச்சர் நிர்மல் குமார் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: தங்​கள் குடும்​பத்​தைப் பாது​காக்க திமுக​வும் அதி​முக​வும் பாஜக​வுடன் இணைந்​தா​லும் ஆச்​சரியப்​படு​வதற்கு இல்லை என்று அமைச்​சர் சிடிஆர்​.நிர்​மல்​கு​மார் கூறி​னார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக​வினர் மற்​றும் பொது​மக்​கள் 10-க்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் மொபைல் போனில் வீடியோ எடுப்​ப​தால் நிகழ்ச்​சிகளுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​படு​வ​தில்​லை. இடையூறு இருந்​தால், அதை முறைப்​படுத்​திக்​கொள்​வோம்.

மதுரை மாநக​ராட்​சி​யில் தனி​யார் குப்பை அள்​ளும் நிறு​வனம், கடந்த மாதத்​தில் குப்​பைக்​குப் பதிலாக மண்ணை அள்​ளிய​தாக ஒரு வழக்​கில் பிடிபட்​டனர். இது திரும்​ப​வும் நடந்​துள்​ளது. இதற்​குக் காரண​மானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்தி மாநக​ராட்சி ஆணை​யர் புகார் அளித்​துள்​ளார். இந்த முறை​கேடு பல மாதங்​களாக நடந்​துள்​ளது. ஆயிரம் டன்​னுக்கு மேல் குப்​பைக்​குப் பதிலாக மண்ணை அள்​ளிச் சென்று கொட்டி வந்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக தற்​போது 2 லாரி​கள் பிடிபட்​டுள்​ளன. இந்த தனி​யார் நிறு​வனத்​துக்​குத்​தான் கடந்த திமுக ஆட்​சி​யில் அனைத்து மாநக​ராட்​சிகளி​லும் ஒப்​பந்​தம் கொடுத்​துள்​ளனர். அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். குதிரை பேரம், ஒட்டக பேரம் குறித்​தெல்​லாம் திமுக​வுக்​கும், அதி​முக​வுக்​கும்​தான் தெரி​யும். பழனி​சாமி, ஸ்டா​லின், உதயநிதி ஆகியோர் சேர்ந்து என்ன செய்​தார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாருக்கு தெரி​யும். அவர் இப்​படியே பேசிக்​கொண்டு இருந்​தால் விரை​வில் வரவிருக்​கும் உள்​ளாட்​சித் தேர்​தல் சிரம​மாகி​விடும்.

திமுக தலை​வரும், அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும் அவர்​களின் குடும்​பத்​தைக் காப்​பாற்​றிக் கொள்​வதற்​காக தங்​கள் கட்​சிகளை பாஜக​வில் இணைத்​துக்​கொண்​டு, அமைச்​சர் பதவி​களை வாங்​கி​னாலும் ஆச்​சரியப்​படு​வதற்கு இல்​லை. அதை நோக்​கித்​தான் அந்த 2 கட்​சிகளும் சென்று கொண்​டிருக்​கின்​றன. இதைத் தெரிந்​து​கொண்​டு​தான் ஒவ்​வொரு​வ​ராக ராஜி​னாமா செய்து கொண்​டிருக்​கின்​றனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT