கோப்புப்படம்
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2024-ம் ஆண்டு நவ.23-ம் தேதி, அந்தமான் கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான 6,016.87 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
விசாரணையின் தொடர்ச்சியாக, மிசோரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தைப்
பொறுத்தவரை சென்னை, மதுரையில் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை நந்தனம் சிஐடி நகரில் வசிக்கும் தோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிபர் இக்பால் என்பவரது வீடு, வண்ணாரப்பேட்டை மின்ட் மாடர்ன் சிட்டியில் வசித்து வரும் அபுபக்கர் கனி சித்திக் என்பவரது வீடு, அந்தப் பகுதி கட்டிட உரிமையாளரின் போரூர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தாம்பரம் அருகே பெரும்பாக்கம் இந்திரா பிரியதர்ஷினி நகரில் வசிக்கும் சார்லஸ் ஜோசப் ரெட்டி என்பவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவருடன் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் துணி வியாபாரி அமீர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடந்தது. இதே போல், மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்த, மணிப்பூர் மாநிலத்தில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் பாலமுருகன் என்பவரது வீட்டில் அவரது மனைவி முருகேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
சோதனை முழுமையாக முடிந்த பிறகு விவரங்கள் வெளியிடப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.