தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரி, தேனி, நெல்லையில் கனமழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தென் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் கோவை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தில் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.8-ம் தேதி தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தில் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கொட்டவாக்கத்தில் 10 செ.மீ மழை, அயப்பாக்கத்தில் 9 செ.மீ மழை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சென்னை கொரட்டூர், மணலி நியூ டவுன், பள்ளிக்கரணையில் தலா 7 செ.மீ மழை, மேடவாக்கம், மடிப்பாக்கம், நெற்குன்றம், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், புதுச்சேரி திருக்கனூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT