நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்ற பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதற்காக விண்மீன் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரவு 10.45 மணியில் இருந்து 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடத்தப்பட்டது.
2026-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் இரவு 11.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அருட்தந்தைகள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் குத்துவிளக்கேற்றி புத்தாண்டை வரவேற்று, அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காணோர் வேளாங்கண்ணியில் குவிந்திருந்தனர். பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மாவட்ட காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.