

சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி சென்னை கடற்கரைகளில் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. மெரினா, பட்டினம்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை என சென்னையின் அனைத்து கடற்கரைகளுக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் உற்சாகமாக வலம் வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டைக் கொண்டாடினர்.
நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய விடுதிகள் மற்றும் பண்ணை விடுதிகள் என அனைத்தும் ஒரு நாளைக்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு, புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினர்.
கடற்கரைகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே கூடியிருந்த மக்கள் நள்ளிரவு 12 மணியானதும் ‘ஹேப்பி நியூ இயர்’ கோஷமிட்டு ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பலரும் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டை வரவேற்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் வகையில் சென்னையில் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் தேவாலயத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
கடலில் குளிக்கவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் கடற்கரைகளில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் வாகனங்களில் அதிவேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர்.
அதன்படி, எல்லை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
மேம்பாலங்கள் மூடல்: கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முன்னதாகவே பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.