சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நேற்று முகத்தில் ஓவியம் வரைந்து 2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்ற மாணவிகள். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையில் மட்டும் 19,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் பந்தயங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
அரசால் அனுமதிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள், இனிப்பகங்கள், துணிக்கடைகளில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். பொதுமக்களைக் கவரும் வகையில் பல்வேறு இடங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியும், வெற்றியும்... ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: இந்த புத்தாண்டு புதிய சக்தி மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளமாக இருக்கட்டும். சுயபரிசீலனை மற்றும் புதிய தீர்மானங்கள் எடுக்கவும் இது நல்ல வாய்ப்பு. இந்நாளில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவோம். 2026 புத்தாண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்க புதிய சக்தியை அளிக்கட்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: 2026 விடியல், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும். நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை நிரப்பட்டும். நிலையான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஒன்றாக முன்னேறுவோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்துக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026-ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம். 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் கனவு இந்த ஆண்டில் வலுப்படும். தமிழகம் யாருக்கும் தலைகுனியாது, தொடர்ந்து போராடும். இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்துடன் 2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக புத்தாண்டு அமைய அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஆங்கிலப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிறைவான மகிழ்ச்சியையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திக தலைவர் கி.வீரமணி, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் எம்.பி.க்கள் சு.திருநாவுக்கரசர், சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, தமுமக தலைவர் க.சக்திவேல் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் காயல் அப்பாஸ், நாகூர் ராஜா, வி.எம்.எஸ்.முஸ்தபா, பால் தினகரன், எம்.எஸ்.மார்டின் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவித்துள்ளனர்.