சென்னை: மாநகராட்சி தூய்மைப் பணிக்காக ரூ.65 கோடியில் வாங்கப்பட்ட புதிய வாகனங்களின் சேவையை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.
சென்னையின் திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2026-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை மேம்படுத்தவும், சுமீத் எல்கோ நிறுவனத்தின் வாகனத் தொகுப்புடன் ரூ.65 கோடியில் கூடுதலாக 356 புதிய வாகனங்களும், தலா 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2,873 குப்பைத் தொட்டிகள் மற்றும் உபகரணங்களும் வாங்கப்பட்டன.
அவற்றின் பயன்பாட்டை சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அதன் பணிமனையில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேற்று தொடங்கிவைத்தார். இதில் 283 மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், 37 குப்பை அழுத்தும் வாகனங்கள், 2 டன் திறன் கொண்ட 28 வாகனங்கள், கொக்கி மூலம் கழிவுத் தொட்டிகளை ஏற்றும் 7 வாகனங்கள், 1 இயந்திரப் பெருக்கி வாகனம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் மழைக் கோட்டுகளையும் ஆணையர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், சுமீத் எல்கோ நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் மஹ்மூத் சையத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.