சென்னை: தமிழக மின்வாரியத்தில் டெண்டர் நடைமுறைகளை விரைவு படுத்தும் வகையில், ரூ.100 கோடி வரையிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் புதிய டெண்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரிய நிலை டெண்டர் குழுவின் நிதி அதிகாரமும் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தின் 141-வது வாரியக்கூட்டம் கடந்த நவ.11-ம் தேதி நடைபெற்றது.
இதில், தற்போதுள்ள தலை மையக உயர்மட்ட டெண்டர் குழு மற்றும் வாரிய நிலை டெண்டர் குழு ஆகியவற்றுக்கு இடையே புதிய குழு ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மின்கழகத்தின் தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி சவிதா தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) தலைமையில் “ஜேஎம்டி நிதி நிலை டெண்டர் குழு” என்ற புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணை மேலாண்மை இயக்குநர் (பகிர்மானம்), இயக்குநர் (நிதி), இயக்குநர் (பகிர்மானம்) மற்றும் டெண்டர் முன்மொழிவைச் சமர்ப்பிக்கும் சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தப் புதிய குழுவுக்கு ரூ.50 கோடி வரையிலான தளவாடங்கள் கொள்முதல் டெண்டர்களுக்கும் ரூ.100 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் கொண்டதாகும்.
ரூ.160 கோடிக்கு மேல் வாரிய ஒப்புதல்
இதேபோல், தற்போதுள்ள வாரியநிலை டெண்டர் குழுவின் நிதி அதிகாரமும் மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, தளவாடங்கள் கொள்முதல் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வரம்பு ரூ.40 கோடியிலிருந்து ரூ.80 கோடியாகவும் ஒப்பந்தப் பணிகளுக்கான வரம்பு ரூ.80 கோடியிலிருந்து ரூ.160 கோடியாகவும் உயர்த்தப்படுகிறது.
இந்த தொகைக்கு மேற்பட்ட மதிப்பிலான டெண்டர்கள் மட்டுமே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதேநேரம், செயற்பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமையக உயர்மட்ட டெண்டர் குழு (ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான வரம்பு) ஆகியோரின் தற்போதைய டெண்டர் அதிகாரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.