தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி

 
தமிழகம்

‘வேளாண் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு’

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

‘வேளாண் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைத்து ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தற்போது ஒரு வேளாண் அலுவலர் சராசரியாக 6 கிராமங்களைக் கவனித்துவரும் நிலையில், இந்த ஒருங்கிணைப்பு மூலம் ஒரு அலுவலருக்கு 3 கிராமங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். இதனால் விவசாயிகள் அதிகாரிகளை எளிதில் அணுக முடியும் என்று அரசு கூறுகிறது.

ஆனால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் தனித்தனி நிபுணத்துவம் பெற்றவர்கள். கடந்த 17 ஆண்டுகாலமாக தங்கள் துறைகளில் அனுபவம் பெற்ற அதிகாரிகளிடம், அவர்களுக்கு தொடர்பில்லாத மற்றொரு துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளை கேட்கச் சொல்வது முறையற்றது. இது விவசாயிகளுக்கு தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும்.

மேலும், 2008-ம் ஆண்டு வேளாண் துறையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட தோட்டக்கலை துறை, தற்போது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. சாகுபடி பரப்பில் 14 சதவீதம் மட்டுமே இருந்தாலும், உற்பத்தியில் 32.5 சதவீதமும், ஏற்றுமதியில் 65 சதவீதமும் இத்துறை பங்களிக்கிறது. இச்சூழலில், துறைகளை ஒருங்கிணைப்பது என்பது மறைமுகமாக தோட்டக்கலை துறையை முடக்கும் செயலாகும்.

எனவே, துறைகளை ஒருங்கிணைப்பதை தவிர்த்து காலியாக உள்ள வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT